மைத்திரி உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று!
போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பலருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளும் கடந்த 2022 ஒக்டோபர் 5 ஆம் திகதி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் குறித்த மனுக்களின் தீர்ப்பு, இன்று 12 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.
உயர்நீதிமன்றம் வழக்கை நிறைவுறுத்தி அனைத்துத் தரப்பினரும் தமது எழுத்து மூல சமர்ப்பணங்களை கடந்த 2022 ஒக்டோபர் 5 ஆம் திகதியிலிருந்து 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்தது. இவ்வாறான நிலையில் திகதி அறிவிப்பு இன்றி வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
வழக்கை விசாரணை செய்த நீதியரசர்கள் குழாமில் உள்ளடங்கும் நீதியரசர் தெஹிதெனிய நாளை 13 ஆம் திகதியுடன் ஓய்வுபெறும் நிலையில் , இன்று 12 ஆம் திகதி மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலாத்துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதில் பிரதிவாதிகள் தரப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, அப்போதைய அமைச்சரவை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டனர்.
இந்த 12 மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக கடந்த 2019 ஒக்டோபர் 2 ஆம் திகதி உயர்நீதிமன்றம் அறிவித்தது. அது முதல் மனு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி காமினி பெரேரா, சட்டத்தரணி தர்ஷன வேரதுவகே,சட்டத்தரணி வர்தனி கருணாரத்ன, சட்டத்தரணி லக்ஷான் டயஸ், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன,சட்டத்தரணி தனுக நந்தசிறி, ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
பிரதிவாதிகளில் சிலருக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளே, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி பெரேரா, சிரேஷ்ட அரச சட்டவாதி சுரேகா அஹமட், அரச சட்டவாதி இந்துனி புஞ்சிஹேவா ஆகியோரைக் கொண்ட குழுவொன்று ஆஜரானது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயாவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் ஆஜராகினர்.
ஏனைய பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன், ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி துலிந்த வீரசூரிய, சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன, சட்டத்தரணி கே.வி.எஸ். குனசேகரராஜன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
இந்நிலையில், பிரதிவாதிகளில் ஒருவராகப் பெயரிடப்பட்டிருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அவ்வழக்குகளை முன்னெடுத்து செல்ல முடியாது என உயர்நீதிமன்றம் கடந்த 2022 செப்டம்பர் 26 ஆம் திகதி அறிவித்தது.
பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக அரசமைப்பின் 35 (1) உறுப்புரை பிரகாரம் வழக்கொன்றை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அறிவித்து உயர்நீதிமன்றம் அதனை அறிவித்திருந்தது.
அவ்வாறான பின்னணியிலேயே இந்த மனுக்கள் தொடர்பிலான விசாரணைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.