3வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து.
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார்.
முகமது ரிஸ்வான் 77 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆகா சல்மான் 45 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. டேவன் கான்வே, கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். கான்வே 52 ரன்னிலும், வில்லியம்சன் 53 ரன்னிலும் வெளியேறினர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் நியூசிலாந்து திணறியது. கடைசி கட்டத்தில் கிளென் பிலிப்ஸ் போராடினார். அவர் அதிரடியாக ஆடினார். 42 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 63 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது கிளென் பிலிப்சுக்கும், தொடர் நாயகன் விருது டேவன் கான்வேக்கு வழங்கப்பட்டது.