உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் 5 மணிநேரம் வாக்குமூலம்
2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு நேற்று மாலை அழைத்து வரப்பட்டிருந்த பிள்ளையான் இன்று காலை 9.45 மணியளவில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகிருந்தார்.
அவர் அங்கு சுமார் 5 மணி நேரம் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.
அடுத்த வார நாடாளுமன்ற அமர்வுகளிலும் பிள்ளையான் பங்கேற்கவுள்ளதை அடுத்து நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவடைந்த பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதி மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் பிள்ளையான் தங்கவைக்கப்படுவார் என்று மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.