6 யூடியூப் சேனல்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை

தேர்தல் நடைமுறை, உச்சநீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்டவை குறித்து போலி செய்திகளை பரப்பிய 6 யூடியூப் சேனல்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மையை கண்டறியும் பிரிவு, நடத்திய ஆய்வில் 6 யூடியூப் சேனல்கள் ஒருங்கிணைந்து தவறான தகவல்களை பரப்பியதை கண்டுபிடித்துள்ளது. எனவே, நேஷன் டிவி, சம்வாட் டிவி, சரோகர் பாரத், நேஷன் -24, ஸ்வர்னிம் பாரத், சம்வாட் சமாச்சார் ஆகிய 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இந்த 6 சேனல்களும் சுமார் 20 லட்சம் சந்தாதாரர்களை கொண்டிருப்பதும், அவர்கள் 51 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேனல்கள், தேர்தல், உச்சநீதிமன்ற விசாரணை, மத்திய அரசு ஆகியவை குறித்த உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பியிருக்கின்றன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை, குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெயரில் போலி அறிக்கைகள் என பல தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத்தன்மை கண்டறியும் பிரிவு நடத்திய ஆய்வில் 3 யூ-ட்யூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியது கண்டறியப்பட்டது.