பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி மாரடைப்பால் மரணம்..!
பாரத் ஜோடோ யாத்திரை என்ற நாடு தழுவிய நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே இன்று காலை தனது நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார்.
ராகுல் காந்தியுடன் அம்மாநிலத்தை சேர்ந்த முன்னணி காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர். நடைப்பயணம் பில்லௌர் பகுதியை அடைந்த போது அதில் பங்கேற்ற காங்கிரஸ் மக்களவை எம்பி சந்தோக் சிங் சவுத்திரி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் சந்தோக் சிங் பக்வாராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவித்தனர்.
எம்பி சந்தோக் சிங் மறைவுக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
66 வயதான சந்தோக் சிங் ஜலந்தர் மக்களவை தொகுதியின் எம்பியாக இருந்தார். பஞ்சாப் மாநில அரசின் கேபினெட் அமைச்சராகவும் இவர் இருந்துள்ளார். சந்தோக் சிங் மறைவைத் தொடர்ந்து தனது நடைப்பயணத்தை ரத்து செய்த ராகுல் காந்தி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.