கொரணா பாதிப்பு 35 நாட்களில் 60000 பேர் உயிரிழப்பு..
சீனாவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதையடுத்து மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அதை சீன அரசு மறுத்தது. கொரோனாவுக்கு பலியானவர்கள் குறித்த எண்ணிக்கையை சீனா மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 11-ந்தேதி 90 கோடியை கடந்துவிட்டதாகவும் நாட்டில் 64 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பீகிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவில் கடந்த 35 நாட்களில் மட்டும் கொரோனா தொடர்பான பாதிப்புகளால் சுமார் 60000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வரை சீனாவில் 59,938 கொரோனா தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையத்திற்கு உட்பட்ட மருத்துவ நிர்வாக அலுவலக தலைவர் ஜியோ யாஹுய் செய்தியாளர் சந்திப்பில் கூறி உள்ளார்.
கொரோனா வைரசால் நேரடியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதில் 5,503 இறப்புகளும், கொரோனாவுடன் இணைந்த அடிப்படை நோய்களால் 54,435 இறப்புகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார்.