ரணிலை எதிர்த்து வீதியில் இறங்கிய போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம்!
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது.
தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்க இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் ஆகியோர் இணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஜனாதிபதி கலந்துகொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற வேளை, யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகிய எதிர்ப்புப் பேரணி பொங்கல் நிகழ்வு இடம்பெற்ற இடத்தை நோக்கி நகர்ந்தது.
இதன்போது , யாழ். அரசடி – பாரதியார் சிலையடிப் பகுதியில் போராட்டக்காரர்களைப் பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தினர். அங்கு கலகம் அடக்கும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட பெருமளவு பாதுகாப்புப் பிரிவினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
தடுப்புக்களை உடைத்துக் கொண்டு பேரணி செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டு போராட்டக்காரர்களைத் துரத்தினர்.
இந்தக் களேபரத்தின் போது பொலிஸார் ஒருவர் காயமடைந்தார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதிக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதிக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், காணிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.