சாதனை வெற்றி… 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா.
இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி 166 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஷூப்மன் கில் 116 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஓவரை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.
முன்னணி பேட்ஸ்மேன்கள் அவிஷ்கா பெர்னாண்டோ (1), குசால் மெண்டிஸ் (4), நுவனிது பெர்னாண்டோ (19) ஆகியோர் சிராஜ் ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சனகா(11) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். 50 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது. 22 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 73 ரன்களில் சுருண்டது.
இதனால் இந்தியா 317 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா ஏற்கனவே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி உள்ளது.