துணிவு – திரை விமர்சனம் – விமர்சனம்.
நரைமுடி ஹேர் ஸ்டைல், இயந்திர துப்பாக்கி, பன்ச் டயலாக், ஜோடியாக இல்லாத ஒரு ஹீரோயின், அடிவாங்குவதற்கென்றே புறப்பட்டு வருகிற வில்லன்கள். அஜித் படங்களின் சமீபத்திய பார்முலா இதுதான், அதுவேதான் இந்த படத்திலும்.ஒரு தனியார் வங்கி மியூச்சுவல் பண்ட் என்கிற பெயரில் 25 ஆயிரம் கோடி பணம் மக்களிடம் வசூலிக்கிறது. பின்னர் அதற்கு ஒரு நஷ்ட கணக்கு காட்டி ஏமாற்றி விட்டு மொத்த பணத்தையும் அள்ள நினைக்கிறது. அதாவது வங்கியே வங்கியை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறது. அந்த திட்டத்தை சென்னையில் உள்ள தனது வங்கி கிளையில் அரங்கேற்றுகிறது. அந்த திட்டம் செயல்படுத்தப்படும்போது உள்ளே இன்னொருவர் இருக்கிறார் அவர் அஜித். இண்டர்நேஷனல் கேங்ஸ்டர். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை.
கடன், கடன் அட்டைகள், மியூச்சுவல் பண்ட் இவற்றின் மூலம் தனியார் வங்கிகள் மக்களை எந்த அளவிற்கு ஏமாற்றி சம்பாதிக்கின்றன என்பதை பிரமாண்ட ஒரு ஆக்ஷன் கதை மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். அதற்கு அஜித் என்கிற பிராண்டை கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார். ஒரு சர்வதேச கிரிமினல் திடீரென சமூக அக்கறையுடன் செயல்படுவதுதான் மிகப்பெரிய லாஜிக் பொத்தல். வங்கி கொள்ளையில் பரபரப்புடன் தொடங்கும் படம், முடிகிற வரை ஒரு கிளைமாக்ஸ் மூடிலேயே செல்வதுதான் படத்தின் சிறப்பு. அஜித் போலீஸ் கான்ஸ்டபிள் மகாநதி சங்கருடன் மட்டும் டீல் பேசுவது, மீடியாவை சேர்ந்த மோகன சுந்தரம், இன்ஸ்பெக்டர் பக்ஸ் உறவு இப்படி சில இயல்பான கேரக்டர்கள் மூலம் படத்தை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
மஞ்சு வாரியர் வருவார், சுடுவார், வேகமாக ஓடுவார் இதை தவிர அவர் பெரிதாக எதையும் செய்யவில்லை, செய்ய வாய்ப்பும் இல்லை.அஜித் வழக்கம்போல இழுத்து இழுத்து பன்ச் டயலாக் பேசுகிறார். பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார். இயந்திர துப்பாக்கியை இரண்டு கையாலும் பிடித்துக் கொண்டு சுட்டுத் தள்ளுகிறார், இடையிடையே நடனமும் ஆடுகிறார். சமுத்திரகனி வீராப்பும், முறைப்புமிக்க போலீஸ் அதிகாரியாக கவனம் பெறுகிறார். ஒரு வங்கி கொள்ளையில் உள்ள பெரிய நெட்ஒர்க்கையும், அதில் புரளும் பல ஆயிரம் கோடியையும் பார்க்கும்போது அப்பாவிகள் எவ்வளவு ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்பதை படம் உணர வைக்கிறது.
தனியார் வங்கிகளின் முகத்திரையை கிழித்து, அப்பாவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிற வகையில் பாராட்டப்பட வேண்டிய படம். ஆனால் ஒரு கேங்ஸ்டரை பாராட்ட வைத்து மக்களின் அதே அப்பாவித்தனத்தை படமும் ஊக்குவிக்கிறது என்பது முரண்பாடு. இரண்டாம் பாதியில் படம் தடம் புரண்டு செல்வதையும் தடுக்க முடியாமல் திணறி இருக்கிறார் வினோத்.சண்டை காட்சிகளும், சில காட்சி அமைப்புகளும் சில ஹாலிவுட் படங்களையும், குறிப்பாக சமீபத்தில் வெளிவந்து பரபரப்பான ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடரையும் நினைவுபடுத்துகிறது. கதைதான் வெப்தொடரிலிருந்து எடுத்திருக்கிறார் என்றால் திரைக்கதையாவது புதிதாக யோசித்திருக்கலாம். அதிலும் கோட்டை விட்டிருக்கிறார் வினோத்.