யாழில் காணிகளை விடுவிக்கப் படைத்தரப்பு இணைக்கம்! – இரு வாரங்களுக்குள் செயற்படுத்த ரணில் பணிப்பு.
யாழ்., பலாலி இராணுவப் படைத் தலைமையகத்துக்கு எதிராக, பலாலி வீதியின் கிழக்குப் புறமாகவுள்ள காணிகளை விடுவிக்க நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் இணங்கியுள்ளனர். அத்துடன் வலிகாமம் வடக்கின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்புத் தரப்பினர் கைவசமுள்ள 108 ஏக்கர் காணிகள் இரு வாரங்களுக்குள் விடுவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை 5.30 மணியிலிருந்து 6.45 மணி வரை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண, ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, யாழ். மாவட்ட இராணுவத் தளபதி போன்றோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன், அங்கஜன் இராமநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கு.திலீபன், காதர் மஸ்தான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பாதுகாப்புத் தரப்பினர் வழமை போன்று போர்க் காலத்தில் தம்வசம் இருந்த காணிகளில் பெரும்பாலானவற்றை விடுவித்துவிட்டோம் என்றும் இன்னும் சிறிய அளவே உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாலாலி இராணுவத் தலைமையகத்துக்கு எதிர்ப்புறமாக பலாலி வீதியின் கிழக்குப் பகுதியில் சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் வரையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மிக நீண்ட காலமாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், காணி விடுவிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இதன்போது படைத்தரப்பினர், அந்தப் பிரதேசத்தில் தமது முக்கியமான முகாம்கள் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
அதனை விடுவிப்பது கடினம் என்று கூறியதுடன், தற்போது பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாகச் செயற்படுவதால், அதற்கு அருகில் 10 மீற்றருக்கு உயர்வான கட்டடங்கள் அமைக்க முடியாது எனவும் குறிப்பிட்டனர். எனவே, மேற்படி பிரதேசத்தை விடுவிப்பது சாத்தியமற்றது என்ற வகையில் கூறினர்.
இதன்போது அந்தப் பகுதியில் விவசாய நிலங்களே உள்ளன. முதலில் அதனை விடுவியுங்கள் என்று மீளவும் கோரப்பட்டதையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்தப் பிரதேசத்தில் விடுவிக்கக் கூடிய நிலங்களை இரு வாரங்களுக்குள் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு தனது செயலகப் பிரதானி சாகல ரத்னாயக்கவுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும் பாதுகாப்புத் தரப்பினர் வலிகாமம் வடக்கின் பல்வேறு இடங்களிலும் உள்ள 108 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடாக அறிவித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் கீரிமலையில் கட்டப்பட்டுள்ள மாளிகைக்கும், கீரிமலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள பிரதேசம், காங்கேசன்துறை சந்திக்கும் கடற்படைமுகாமுக்கும் இடையில் அமைந்துள்ள கடற்படையினருக்குச் சொந்தமான முகாம் அமைந்துள்ள பிரதேசம், கிராமக்கோட்டுச் சந்திக்கு அண்மையாகவுள்ள இராணுவ முகாம் பிரதேசம், பலாலி வடக்கில் அன்ரனிபுரத்துக்கு அண்மையாகவுள்ள இராணுவ முகாம் என்பனவே விடுவிக்கப்படவுள்ளன.