திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் சபதமேற்போம் – எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “தான் வாழும் வரை கோட்டை பக்கமே திமுகவையும், அவர்களது கூட்டத்தைச் சேர்ந்தவர்களையும் வர முடியாமல் செய்து மக்கள் தலைவராக செல்வாக்குடன் திகழ்ந்தவர் தான் நம் எம்ஜிஆர். சத்துணவுத் திட்டம், தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம், பெயர்களுக்குப் பிறகு இருந்த சாதிப் பெயர்கள் நீக்கம், விவசாயிகளின் துயர் துடைக்க இலவச மின்சாரம், குடிசைகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு இலவச மின்சாரம் போன்ற பல சிறந்த நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்தான் எம்.ஜி.ஆர்” என்று புகழ்ந்துள்ளார்.
1972ஆம் ஆண்டில் மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்றவாறு பஞ்சப்படி கொடுக்கப்படும் என்று அறிவித்து அரசாணையை வெளியிட்டதாக கூறிய அவர், அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதை மாநில அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த மறுத்தார். பிறகு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான பஞ்சப்படி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கொடுக்கும் பொருட்டு, ஊதியக் குழு ஒன்றினை அமைத்து, அதை அமுல்படுத்திக் காட்டி, அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார் என்று கூறியுள்ளார்.
மேலும், “இன்றைய திமுகவின் மு.க.ஸ்டாலின் அரசு தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால்
ஆட்சிக்கு வந்தது. நிர்வாக திறனற்ற ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , அவரது மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று ஆளாளுக்கு தமிழக அரசை கூறு போட்டுக்கொண்டு அரசை நடத்துகின்றனர்.
எனவே, இந்த மக்கள் விரோத இந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, எம்.ஜி.ஆர். பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் வீரசபதம் ஏற்று, கண் துஞ்சாது களப்பணி ஆற்றி, மீண்டும் அதிமுக நல்லாட்சியை மக்களுக்கு வழங்கிடுவோம்” என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.