மீட்கப்பட்ட மாலுமி காயங்களுடன் கல்முனை வைத்தியசாலையில்

அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பிராந்தியத்தில் தீப்பற்றி எரிந்த வெளிநாட்டு எரிபொருள் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களில் மாலுமி தீக்காயங்களுடன் இருந்ததையடுத்து அவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எல்மோர் (வயது 57) என்ற பெயருடைய குறித்த மாலுமி பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மாலுமி ஒருவர் உட்பட 18 பணியாளர்கள் இலங்கைக் கடற்படையின் கப்பல் ஒன்று மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சங்கமன்கண்டியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் குறித்த கப்பலில் இன்று காலை 7.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
பனாமா நாட்டுக்குச் சொந்தமான MT New Diamond என்ற கப்பலே தீ விபத்துக்குள்ளாகியுள்ளது எனக் கடற்படையின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.