வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதற்கு சீமான் எதிர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அதுதொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி விசாரிக்கும் என அறிவிப்பு வெளியானது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதித்தமிழ்க்குடிகள் மீதான தீண்டாமைக்ன் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி, வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டத்திற்குரியது. தமிழ்நாட்டின் சிறு கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை புரிந்த குற்றாவாளிகளைகூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தமிழ்நாட்டு காவல்துறை திறனற்றதாகிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
தங்களால் கண்டறிய முடியவில்லை என்று ஒப்புக்கொள்ளும் வகையில், காவல்துறை ஆணையரே வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றுவதாக கூறுவது, காவல்துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலைமைச்சர் அவர்களின் நிர்வாகத்திறனுக்கு ஏற்பட்ட தலைகுனிவில்லையா? முதலமைச்சர் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், எதற்கெடுத்தாலும் குழு அமைக்கும் திமுக அரசு அமைத்த சமூகநீதி கண்காணிப்பு குழு வேங்கைவயல் கிராமத்தில் செய்த விசாரணை என்ன? நடத்திய ஆய்வு என்ன? கொடுத்த அறிக்கை என்ன? அதன் பெயரில் எடுத்த நடவடிக்கை என்ன? இதுதான் 60 ஆண்டுகாலமாக திராவிடம் தமிழர் மண்ணில் கட்டிக்காத்த சமூகநீதியா? என்றும் கேள்விகளை முன்வைத்தார்.
மேலும், “குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை என்ற பெயரில் வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை தமிழ்நாடு அரசு மேலும், மேலும் காலம் தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.