பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் தமிழ்நாட்டின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்
சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். தற்போது பொங்கல் விடுமுறையை முடித்துக் கொண்டு பெரும்பாலானோர் சென்னைக்கு திரும்புகின்றனர். கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆத்தூர் சுங்கச்சாவடி முதல் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வரை கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், மதுராந்தகம், பாலாறு பாலம் ஆகிய பகுதிகளிலும் வரிசை கட்டி நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்து சுங்கச்சாவடியை கடக்கும் நிலை ஏற்பட்டது. மதியம் 12 மணி முதல் இரவு 12 மணி வரை சுமார் 43 ஆயிரம் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்து சென்னை மார்க்கத்திற்கு செல்ல கூடுதலாக இரண்டு வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நெல்லையில் இருந்து சென்னைக்கு திரும்பும் அனைத்து ரயில்களிலும் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் அமருவதற்கு கூட இருக்கை கிடைக்காமல் நின்றவாறே மக்கள் பயணித்தனர். சிலர் பொருட்கள் வைக்கும் பகுதிகளில் அமர்ந்துகொண்டு பயணிக்கும் நிலை ஏற்பட்டது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மக்கள் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறுவதை காணமுடிந்தது. குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.