இப்படியும் ஒரு கலப்படம்.. ஆந்திராவை அதிரவைத்த ஆயில் மோசடி..!
விலங்குகளின் கொழுப்பு, எலும்பு ஆகியவற்றில் இருந்து எண்ணை பிழிந்து சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்து விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த இரண்டு பேர் ஆந்திர மாநில துனி நகரில் கைது செய்யப்பட்டனர்.
காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி பகுதியில் கலப்பட எண்ணெய் விற்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு அதிரடியாகச் சென்ற சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் ஏராளமான அளவுக்கு பசுவின் தோல்கள், வெட்டப்பட்ட பசுவின் உடல், எலும்புகள், வெட்டுவதற்காக கட்டிவைக்கப்பட்டிருந்த பசுக்கள், பசுக்களின் கொழுப்பிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
விலங்குகளின் கொழுப்பில் இருந்த தயாரிக்கப்பட்ட எண்ணெய் உள்ளிட்டவற்றின் மாதிரிகளையும் அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கலப்பட எண்ணெய்யை சிறிய உணவகங்கள் மற்றும் உள்ளூரில் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அவர்கள் சப்ளை செய்துவந்தது தெரியவந்துள்ளது.