யாழ். மேயர் தெரிவு இன்று! – ஆர்னோல்ட் மீண்டும் தெரிவாக வாய்ப்பு.
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் தெரிவு இன்று இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்படும் முன்னாள் மேயர் இ.ஆர்னோல்ட் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாநகர மேயராக இருந்த ஆர்னோல்ட் சமர்ப்பித்த வரவு- செலவுத் திட்டம் இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய மேயரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் ஒரு வாக்கால் ஆர்னோல்ட் தோல்வியடைந்திருந்தார்.
புதிய மேயராகத் தெரிவு செய்யப்பட்ட வி.மணிவண்ணன் கடந்த ஆண்டு சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது தடவையும் வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்காமல் பதவி துறந்திருந்தார். இந்தநிலையில் மீண்டும் மேயர் தெரிவு இடம்பெற்றால் அதனைச் சவாலுக்கு உட்படுத்துவேன் என்று அவர் தெரிவித்திருந்தாலும் இன்று மேயர் தெரிவு இடம்பெறவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகக் களம் கண்டு 16 பேர் வெற்றி பெற்றிருந்தனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி தற்போது கூட்டமைப்பிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியேறியிருந்தாலும், புளொட் மற்றும் ரெலோ என்பன இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் களமிறக்கப்படும் ஆர்னோல்ட்டை ஆதரிக்கவுள்ளன எனத் தெரியவருகின்றது.
“மேயர் பதவி தேசிய கட்சிக்குச் செல்லக் கூடாது. மணிவண்ணன் கடந்த காலங்களில் தன்னிச்சையாகச் செயற்பட்டிருந்தார். எனவே, அவர் மீளவும் மேயராகத் தெரிவு செய்யப்படக்கூடாது” என்ற காரணங்களின் அடிப்படையில் ஆர்னோல்ட்டை ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக ரெலோவைச் சேர்ந்த பிரதி மேயர் து.ஈசன் தெரிவித்தார்.
இதேவேளை, ஆர்னோல்ட்டை எதிர்த்து வி.மணிவண்ணன் களமிறங்குவார் என்று முன்னர் கூறப்பட்டபோதும் அது நடைபெறாது என்று தெரியவருகின்றது. மணிவண்ணன் தோல்வியடையக் கூடும் என்பதால், உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள சமயத்தில் அது பின்னடைவாகிவிடும் என்று கருதுவதால் அவர் போட்டியிடுவதைச் சிலவேளைகளில் தவிர்க்கக் கூடும். அதேநேரம் அவரது அணி சார்பில் இன்னொருவர் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்ட் களமிறங்குவது தொடர்பில் கட்சிக்குள் ஒருமித்த நிலைப்பாடு நேற்றுமுன்தினம் காணப்படவில்லையாயினும் நேற்று அவருக்கு ஆதரவான ஒருமித்த நிலைப்பாடு ஏற்பட்டது. ஈ.பி.டி.பி.யிலிருந்து தற்போதைய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விலகியுள்ள சில உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் உறுப்பினரும் ஆர்னோல்ட்டை ஆதரிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிலவேளைகளில் உறுப்பினர்களில் 50 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் வருகை தராது விட்டு தெரிவை ஒத்திவைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படக் கூடும் என்றும் சில வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.