ரணில் மீது தமிழருக்கு என்ன கோபம்? தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் எதற்கு? – இப்படிக் கேட்கிறார் தினேஷ்.
“தமிழ் – இந்து மக்களின் பாரம்பரிய நிகழ்வான தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இந்நிலையில், அவரை எதிர்த்து ஒரு தொகுதியினர் வீதியில் இறங்கினர். ஜனாதிபதி மீது அவர்களுக்கு என்ன கோபம்? அவர் என்ன குற்றம் செய்தார்?
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் பிரதமர் தினேஷ் குணவர்த்தன.
யாழ்ப்பாணத்தில் பொங்கல் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பிலும், அதைப் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் செய்து அடக்கியது குறித்தும் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குக் கருத்து வெளியிடும் போதே பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாதாரண பிரஜை அல்லர். அவர் நாட்டின் தலைவர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்த ஒரு தலைவர்.
அவரின் யாழ். விஜயத்தை அங்குள்ள ஒரு குழுவினர் எதிர்த்துள்ளனர். அவர்களைப் பின்னால் நின்று மற்றொரு குழுவினர் இயக்கியுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது அவர்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. பொலிஸ் தடைகளைத் தகர்த்து அந்தக் குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தமையால் ஆபத்து நிலைமையை உணர்ந்து பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் செய்தனர்.
இது ஜனநாயக நாடு. வீதியில் இறங்கி எதிர்ப்புத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் எதற்கு? ஆர்ப்பாட்டங்களை நிறுத்திவிட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்” – என்றார்.