மக்களுக்கு உணவில்லை என்று கூறி தேர்தலை ஒத்திப்போட முடியாது!

“தேர்தலை நடத்துவது ஜனநாயக உரிமை. மக்களுக்கு உண்பதற்கு உணவில்லை என்று கூறி தேர்தலை ஒத்திப்போட நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திவைக்கும் என்று வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்கள் உண்பதற்கு உணவில்லாத நிலையை உருவாக்கியவர்கள் தான் மக்களுக்கு உணவு வழங்குவது பற்றிப் பேசுகின்றார்கள். அவர்கள்தான் இப்போதும் மக்களைச் சுரண்டிக்கொண்டு – கொள்ளையடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். மிக விரைவில் அவர்களின் பெயர்களை வெளியிடுவோம். மக்கள் முன் அம்பலப்படுத்துவோம்.
அரசு பிச்சையெடுத்துக்கொண்டு இருக்கின்றது. அப்படிப் பிச்சையெடுக்கும் அரசில் கூட திருடுகின்றநாடாளுமன்ற உறுப்பினர்கள் – அமைச்சர்கள் உள்ளனர். சரியான தகவலுடன் மக்கள் முன் அவர்களை அம்பலப்படுத்துவோம்.
இவர்கள் தேர்தலை ஒத்திப்போடுவதற்காக பொய்யாகக் காரணம் தேடுகின்றனர். அப்படியென்றால் இந்தத் திருடர்களை பிடித்துக் காட்டுங்கள்.
இது தேர்தல் தோல்வி பயமே அன்றி வேறில்லை. பயம் இல்லை என்று காட்டுவதற்காகத்தான் முதன்முதலாக ஓடிச் சென்று தேர்தலுக்குக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்” – என்றார்.