பிரபாகரன் – மாத்தையாவைப் பிரிப்பதற்கே புலிகளுக்கு உதவினாராம் பிரேமதாஸ! – இப்படிக் கூறுகின்றார் சஜித்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தையாவைப் பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் மகனுமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அதில் ஒரு கட்டத்தில் தன்னால் பாடசாலைக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பஸ்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் பட்டியலிட்டார் .
இதன்போது குறுக்கிட்ட அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, “உங்கள் தந்தையான பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு திறைசேரி ஊடாக காசோலைகள் வழங்கப்பட்டன. அதற்கு நன்றிக்கடனாகவே தற்போது வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உங்களுக்கு நிதி உதவி வழங்குகின்றார்கள். அதனை வைத்துத்தான் நீங்கள் இவ்வாறு பஸ்களை அன்பளிப்புச் செய்கின்றீர்கள் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்” என்றார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதிலளிக்கையில், “இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பெயர்ட் பவர் என்பவர் ஹிட்லரின் படைகளுக்கும் முசோலினியின் படைகளுக்கும் ஆயுதங்களை வழங்கி உதவினார்.
இது இரு அணியிலுள்ளவர்களையும் பிளவுபடுத்தும் தந்திரம். அதேபோன்றுதான் விடுதலைப்புலிகள் அமைப்பில் அதன் தலைவர் பிரபாகரனோடு மாத்தையாவும் யோகியும் முரண்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சில உதவிகளை வழங்கி அவர்களை மேலும் பிளவடைய வைக்கப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கு எனது தந்தை காசு கொடுத்தது என்றால் 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவும் விடுதலைப்புலிகளுக்குக் காசு கொடுத்துத்தான் தேர்தலில் வெற்றி பெற்றார்” – என்றார்.