வாசிப்பு மற்றும் கணித திறனில் பின்தங்கும் மாணவர்கள்- வருடாந்திர அறிக்கையில் தகவல்!
2022இல் பள்ளி குழந்தைகளின் அடிப்படை வாசிப்பு திறன் 2012 க்கு முந்தைய நிலைகளுக்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் அடிப்படை கணித திறன்கள் தேசிய அளவில் 2018 நிலைகளுக்கு குறைந்துள்ளன என்று வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (ASER) 2022 அறிவித்துள்ளது.
வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (ASER) 2005 ஆம் ஆண்டு முதல் என்ஜிஓ பிரதம் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கல்வியின் வருடாந்திர நிலை அறிக்கை (ASER) என்பது குடிமக்கள் தலைமையிலான குடும்பக் கணக்கெடுப்பாகும், இது குழந்தைகளின் பள்ளி நிலை, அவர்களின் அடிப்படை வாசிப்பு மற்றும் எண்கணித திறன் மதிப்பீடுகளை வழங்குகிறது.
2018 க்கு பின்னர் கொரோனா பரவல் காரணமாக கைவிடப்பட்ட கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு பின் 2022 இல் நடந்தது. 616 மாவட்டங்களில் உள்ள 19,060 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் பள்ளிக் குழந்தைகளை வைத்து இந்த மதிப்பீடு செய்யப்பட்டது.
நேற்று வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டு கல்வி நிலை அறிக்கையில் 6-14 வயதுக்குட்பட்ட 98.4% மாணவர்கள் பள்ளி கல்வி பெறுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதே வேளையில் தேசிய அளவில், அரசு அல்லது தனியார் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பில் சேரும் குழந்தைகளின் விகிதம், 2018 ஆம் ஆண்டில் 50.5% இல் இருந்து 2022 இல் 42.8% ஆகக் குறைந்துள்ளது. அதிக குறைவு எண்ணிக்கையை பதிவு செய்த மாநிலங்களாக பீகார், ஒடிசா, மணிப்பூர் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை உள்ளன.
43.9% முதல் வகுப்பு குழந்தைகள் ஒரு எழுத்தை கூட படிக்க முடியாத நிலையில் உள்ளனர் என்றும், 12% குழந்தைகள் மட்டுமே முழு வார்த்தையையும் படிக்கிறார்கள் என்றும் இந்த அறிக்கை காட்டுகிறது. இதேபோல், முதலாம் வகுப்பில் உள்ள குழந்தைகளில் 37.6% பேர் 1 முதல் 9 வரையிலான எண்களைப் படிக்க முடியவில்லையாம்.
2018 ஆம் ஆண்டில் அதிக வாசிப்பு நிலைகளைக் கொண்டிருந்த கேரளா 52.1% இலிருந்து 2022 இல் 38.7% குறைந்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் 15% வரை சரிவை சந்தித்துள்ளது. 2022 ஆண்டு கல்வி நிலை அறிக்கை, அரசு அல்லது தனியார் பள்ளிகளில் III-ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்கும் சதவிகிதம் 2018 இல் 27.3% இல் இருந்து 2022 இல் 20.5% ஆகக் குறைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் 12% வரை பெரிய வீழ்ச்சி காணப்படுகின்றன.
2022 இல் தான் முதன்முறையாக பள்ளிகளில் சேராத குழந்தைகளின் சதவீதம் 2 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோய் காலத்தில் பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்ட பிறகும், 2018 மற்றும் 2022 க்கு இடையில் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளின் விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது.
தேசிய அளவில் 2018 முதல் அரசுப் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் விகிதம் அதிகரித்துள்ளது. 2010 முதல் 2014 வரை, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவைக் கண்டது, அதைத் தொடர்ந்து 2014 முதல் 2018 வரை நிலையாக இருந்தது. அதன் பின்னர் 2018 முதல் 2022 வரை அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 7.3 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது.
பள்ளிகளுக்கு வெளியே டியூஷன் மூலம் கல்வி கற்கும் மாணவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக சதவீத மாணவர்களைக் கொண்ட மாநிலங்களாக பீகார் (71.7%), மணிப்பூர் (53.4%) மற்றும் ஜார்கண்ட் (45.3% ) திகழ்கிறது. எண்ணிக்கை குறைந்துள்ள மாநிலங்களாக குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் திரிபுரா மாறியுள்ளது.
கிரேடு V மற்றும் கிரேடு VIII இல் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளின் வாசிப்பு மற்றும் எண்கணித நிலைகளில்,சிறுமிகள் வாசிப்புத் திறனிலும் சிறுவர்கள் எண்கணிதத்தில் சிறந்து விளங்குகின்றனர் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.