15 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகனங்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசு!

15 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகனங்களுக்கான முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதில் 2021 மோட்டார் வாகனச் சட்டத்தின் ஸ்கிராப்பிங் பாலிசியின்படி, 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து அகற்றி, ஸ்கிராப்பிங் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, 15 ஆண்டுகள் நிறைவடைந்த அனைத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் வரும் ஏப்ரல் 1, 2023 முதல் தடை செய்யப்படும். அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகள் உட்பட மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் சொந்தமான ஜீப்கள், குப்பை அள்ளும் லாரி மற்றும் வண்டிகள், டிரக், டிராக்டர், குடிநீர் லாரிகள் உள்ளிட்ட அனைத்தும் இதில் அடக்கம்.
இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் சொந்தமான அனைத்து வாகனங்களும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பதிவு நீக்கம் (de-registered) மற்றும் அழிக்கப்படும் (scrapped) என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த விதி பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் கவச வாகனங்கள் (armoured vehicles) மற்றும் சட்டம் ஒழுங்கு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கு பொருந்தாது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் 15 ஆண்டுகள் நிறைவு செய்த வாகனங்களை இயக்கவும் கூடாது, அவற்றின் உரிமத்தை புதுப்பிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22 யூனியன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த பாலிசி தனிப்பட்ட வாகனங்களுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபிட்னஸ் டெஸ்ட் செய்யவும், அதே நேரத்தில் வணிக வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிட்னஸ் டெஸ்ட் செய்வதையும் கட்டாயமாக்குகிறது.
கடந்த ஆண்டு அதாவது ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வந்த இந்த பாலிசி வரும் ஏப்ரல் 2023 முதல் நாட்டில் மிக தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. 2022, ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய கொள்கையின் கீழ், பழைய வாகனங்களை ஸ்கிராப்பிங் செய்த பிறகு வாங்கப்படும் வாகனங்களுக்கு சாலை வரியில் 25% வரை வரி தள்ளுபடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கும் என் மத்திய அரசு கூறியுள்ளது.