ஆப்கானிஸ்தானில் கடும் உறை பனி: 78 பேர் உயிரிழப்பு.
ஆப்கானிஸ்தானில் கடந்த 1½ ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை எந்தவொரு நாடும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த நாட்டுக்கான சர்வதேச நிதிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதோடு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தான் அரசுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்கானிஸ்தானில் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு உணவு பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
ஒருபுறமும் தலீபான்களின் அடக்குமுறை, மறுபுறம் உணவு பஞ்சம் போன்ற நெருக்கடி போன்றவற்றால் 2 கோடிக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த சூழலில் இயற்கையும் தன் பங்குக்கு ஆப்கானிஸ்தான் மக்களை துயரப்படுத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் காபூல் மற்றும் அதனை சுற்றியுள்ள சில மாகாணங்களில் வெப்பநிலை மைனஸ் 28 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது.
சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என எங்கு பார்த்தாலும் பனித்துகள் குவிந்து கிடக்கின்றன. குளிர் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.