தமிழ்நாடு ஆளுநர் வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்படலாம் என தகவல் வருகிறது – திருமாவளவன்
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக ஆளுநர் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆளுநர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். குறிப்பாக டெல்லி சென்று வந்ததிலிருந்து, மாநில அரசிற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருக்கிறார். மேலும் வேறு பொறுப்பில் ஆளுநர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வருகின்றது” என கூறினார்.
பாஜகவுக்கு காவடி:
தொடர்ந்து பாஜக ஆதரவு நிலைப்பாடு என்ற ஓ.பன்னீர்செல்வம் முடிவு குறித்து பேசிய அவர், அதிமுகவில் உட்கட்சி பூசல் பாஜகவிற்கு சாதகமாக அமையும். போட்டிபோட்டுகொண்டு பாஜகவிற்கு காவடி தூக்குகிறார்கள். பாஜக வளர்வது அதிமுகவிற்கும் நல்லதல்ல. தமிழகத்திற்கும் நல்லதல்ல. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக சார்பிலான மதசார்பற்ற கூட்டணி வெற்றிபெற விடுதலை சிறுத்தைகள் கட்சி பாடுபடும்
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு “திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என கூறினார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய அவர், “வட மாநிலங்களில் கூட இந்த குரல் வலுவாக உள்ளது. பீகாரில் இது குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றேன்” என தெரிவித்தார்.