ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் தனித்துப் போட்டியிடுவாரா? அல்லது காங்கிரஸுக்கு ஆதரவு தருவாரா ?
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் இடைத் தேர்தலில் காங்கிரஸ் – அதிமுக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸ் சார்பில் அதன் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அதனைத் தொடர்ந்து திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் என கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோரவுள்ளதாக தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்தால் அதனை திமுக வரவேற்கும் என்று அமைச்சர் முத்துசாமியும் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் – 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமைப் பயணத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அத்துடன், காங்கிரஸுக்கு ஆதரவான நிலைப்பாட்டில்தான் அவர் இருக்கிறார். ஒருவேளை மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் யாரும் வேட்பாளராக நிறுத்தப்படாத பட்சத்தில் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இடைத் தேர்தல் தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.