ஒரே ஒரு மாணவருக்காக இயங்கும் அரசுப் பள்ளி.. !
மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150 மக்கள் மட்டுமே வசிக்கும் நிலையில், அங்கு ஒரு ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அனைவருக்கும் கல்வி என்ற அரசு திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. பள்ளியின் தனித்துவமான சிறப்பு என்னவென்றால் இதில் ஒரே ஒரு மாணவர் மட்டும் தான் படிக்கிறார். இந்த ஒரு மாணவருக்காக 12 கி.மீ பயணம் செய்து ஒரு ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார். இந்த கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் ஷேகோக்கர் என்ற ஒரே மாணவர் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் சுமார் 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அருகே உள்ள பகுதியில் வசிக்கும் ஆசிரியர் கிஷோர் 12 கி.மீ தூரம் பயணம் செய்து மாணவர் கார்த்திக்கிற்கு பாடம் நடத்துகிறார். இது குறித்து ஆசிரியர் கிஷோர் கூறுகையில், இந்த கிராமத்தில் 150 மக்கள் வசிக்கும் நிலையில், ஒரே ஒரு மாணவர் தான் இரண்டு ஆண்டுகளாக படித்து வருகிறார். நான் தான் ஒரே ஆசிரியராக அனைத்து பாடங்களையும் நடத்தி வருகிறேன்.
மதிய உணவு திட்டம் தொடங்கி அரசு வழக்கும் அனைத்து திட்டங்களும் இந்த மாணவருக்கு வழங்கப்படுகிறது என்று ஆசிரியர் கிஷோர் கூறுகிறார். ஒரு மாணவர், ஒரு ஆசிரியரை வைத்துக்கொண்டு பள்ளி தொடர்ந்து சிறப்பாக நடப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பாராட்டுகின்றனர்.