உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்வதே அடுத்த இலக்கு – தலைமை நீதிபதி
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி சந்திர சூட், உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்புவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைத்திருப்பதாக கூறினார். குறிப்பாக சட்டம் பயிலும் மாணவர்கள், பல்வேறு வழக்கின் வாதங்களை தெரிந்து கொள்வதற்கு வசதியாக உள்ளது என்றார். உச்சநீதிமன்றம் தொடர்பான தகவல்கள், அனைவருக்கும் கிடைக்க தொழில்நுட்பம் உதவும் என்று தலைமை நீதிபதி நம்பிக்கை தெரிவித்தார். அதன் அடுத்த கட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக சந்திரசூட் கூறினார்.
இதனை பாராட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து வரவேற்கதக்கது என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இது மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் இந்திய மொழிகளை வளர்ப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இதுகுறித்து தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் என்ற தலைமை நீதிபதியின் கருத்தை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். இதனுடன் எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடும் மொழியாக இருக்கவேண்டும் என்பதை நிறைவேற்றினால் நீதி எளிய மனிதர்களுக்கும் கிடைக்கும் என கேட்டுக்கொள்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.