பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான ஈ.ராமதாஸ் காலமானார்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். இதனை அவரின் மகன் கலைச்செல்வன் சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது தந்தை எழுத்தாளர், இயக்குநர், நடிகர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இறுதி சடங்குகள் 24/01/2023 காலை 11 மணி -மாலை 5 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த ராமதாஸ், சினிமா மீதான மோகத்தால் சென்னைக்கு புலம்பெயர்ந்தவர். எழுத்தாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் எழுத்தாளராக எண்ணற்ற படங்களில் வேலை பார்த்துள்ளார்.
சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ராமதாஸ், காக்கிச் சட்டை, விசாரணை, அறம், விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவரின் மறைவை அடுத்து திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.