விமானத்தில் தகாத முறையில் விமான பெண் ஊழியரை சீண்டியதால்…பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணி…!

டெல்லியில் இருந்து ஐதராபாத்துக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று காலை புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் அமர்ந்துவிட்ட நிலையில், விமானப் பணிப்பெண்ணை முதியவர் ஒருவர் தகாத முறையில் சீண்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த விமானப் பணிப்பெண் சம்பந்தப்பட நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பதிலுக்கு அந்த நபரும் அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வேண்டுமென்றே தனது கை படவில்லை என்றும், இடம் குறுகலாக இருந்ததால் கை தெரியாமல் பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். வாக்குவாதம் நீடிக்கவே, மற்ற பயணிகளும், விமான ஊழியர்களும் அங்கு வந்து அவர்களை விலக்கி விட்டனர். இதையடுத்து, அந்த நபர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். இருப்பினும், அவரையும், அவருடன் வந்த மற்றொரு பயணியையும் விமான ஊழியர்கள் இறக்கிவிட்டனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், தனது விமானக்குழு ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால், அவர் இறக்கிவிடப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.