தன் காலத்திலேயே தீர்வை எதிர்பார்க்கிறார் சம்பந்தன்! – மஹிந்த தெரிவிப்பு.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் தலைவர். அவர் நீண்டகால அரசியல் வரலாற்றைக்கொண்ட தலைவர். அவர் தனது காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளார். அவருடன் நான் இறுதியாக நடத்திய சந்திப்பின் போது இதை உணர்ந்துகொண்டேன்.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
“தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரின் கொழும்பு இல்லத்தில் அண்மையில் சந்தித்து உரையாடியமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழர் தரப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ள தீர்வுக்கான பேச்சுக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். இதைச் சம்பந்தனிடம் நான் நேரில் தெரிவித்துள்ளேன்.
அதேவேளை, நாட்டில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களுக்கு மட்டும் பிரச்சினைகள் இல்லை. சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், மலையகத் தமிழ் மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. அந்தத் தரப்புக்களுடனும் பேச்சு நடத்தி பிரச்சினைகளைத் தீர்த்துவைப்போம் என்று ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இந்த நல்ல கருமங்களை எவரும் குழப்பியடிக்க இடமளிக்கமாட்டோம். இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். சமாதானம் மலர வேண்டும். ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்” – என்றார்.