சம்பந்தன், விக்கி, கஜேந்திரகுமாரை சிறையில் அடைப்பதுதான் ஒரே வழி : ராஜபக்ச அரச அமைச்சர்கள்
“தமிழீழ விடுதலைப்புலிகளைப் புகழ்ந்து அவர்களின் கொடிய பயங்கரவாதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய மூவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைப்பதுதான் ஒரே வழி.”
– இவ்வாறு ராஜபக்ச அரசு தெரிவித்துள்ளது.
‘தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டதால் அவர்கள் ஆயுதம் ஏந்திப் போரிடத் தூண்டப்பட்டனர். அதற்கு இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே காரணம்’ என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்திருந்தார்.
விக்னேஸ்வரனின் இந்தக் கருத்து ராஜபக்ச அரசைக் கொதிப்படைய வைத்துள்ளது. இது தொடர்பில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகக் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழீழ விடுதலைப்புலிகள் சிங்கள மக்களை மட்டுமன்றி தமிழ், முஸ்லிம மக்களையும் படுகொலை செய்தவர்கள். சிரேஷ்ட தமிழ் அரசியல் தலைவர்களையும் அவர்கள் சுட்டுப் படுகொலை செய்தவர்கள். நாட்டின் வளங்களை நாசப்படுத்தியவர்கள். நாட்டுக்கு வருவாயை ஈட்டித்தரும் பொருளாதார மையங்களை அழித்தவர்கள். இப்படிப்பட்ட புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?
புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்றபடியால்தான் பல நாடுகள் அந்த அமைப்பைத் தடை செய்தன.
தமிழீழக் கனவுடன் – தனிநாட்டுக் கனவுடன் இந்த நாட்டை நாசமாக்கிய புலிகள் இறுதியில் முள்ளிவாய்க்காலில் கூண்டோடு அழிந்தார்கள்.
முள்ளிவாய்க்கால் மண் பயங்கரவாதிகள் அழிந்த மண். அந்த மண்ணில் சத்தியப் பிரமாணம் செய்த விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் தமது செயலை இப்போது நியாயப்படுத்துகின்றார்கள்.
அதேவேளை, கடந்த நல்லாட்சியில் முள்ளிவாய்க்கால் சென்று பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து விளக்கேற்றிய சம்பந்தனும் பொதுத்தேர்தல் மேடைகளில் புலிகளின் பயங்கரவாதப் போராட்டத்தை நியாயப்படுத்தி உரையாற்றியிருந்தார்.
இம்மூவரும் 9ஆவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். ஆனால், இவர்கள் மூவரும் திருந்துவதாக இல்லை. அதியுயர் சபையிலும் புலிகளின் பாணியில் செயற்படுகின்றார்கள். இவர்கள் மூவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைப்பதுதான் ஒரே வழி” – என்றனர்.