குட்டித் தேர்தல் மூலம் திருடர்களை விரட்ட முடியாது!
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசைக் கவிழ்க்கவோ அரசில் உள்ள திருடர்களை விரட்டவோ முடியாது
என்று இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துக் கூறும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஊருக்கு – கிராமத்துக்கு வேலை செய்யக்கூடியவர்களைத்தான் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
வீதிகள் அமைப்பதற்கு – பாலங்கள் அமைப்பதற்குத் தலைமைத்துவம் வழங்கக்கூடியவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
இதற்காக வேலை செய்யக்கூடிய அனுபவம் உள்ளவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்க வேண்டும்.
திருடர்களை விரட்டுவதற்கும் அரசைக் கவிழ்ப்பதற்கும் நாம் ஒன்றிணைவோம் என்று கூறுகின்றது எதிர்க்கட்சி. அப்படி எதையும் செய்ய முடியாது. அதற்காக அடுத்த பொதுத் தேர்தல் வரும். அதில் பார்த்துக்கொள்ளலாம். உள்ளூராட்சி சபைத் தேர்தல் அதற்கான ஒன்றல்ல. ஊரில் சேவை செய்வதற்கான தேர்தலாகும்.
எல்லோரும் ஒன்றிணைந்து ஊரில் நன்கு வேலை செய்யக்கூடியவர்களைத் தெரிவு செய்வோம்” – என்றார்.