குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசுப் பெண் ஊழியர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ள சிக்கிம் அரசு..!
மக்கள் தொகையை உயர்த்தும் விதமாக ஒன்றுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசுப் பெண் ஊழியர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது சிக்கிம் மாநில அரசு. இப்படி அள்ளித் தந்து குழந்தை பிறப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் சிக்கிம் அரசுக்கு ஏற்பட்டது ஏன் என்பதை விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு.
உலக அளவில் இந்திய மக்கள் தொகை இரண்டாவது இடத்தில் இருந்து முதலிடத்தில் உள்ள சீனாவை முந்தும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் அம் மாநிலத்தில் மக்கள் தொகையை உயர்த்த புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது. சிக்கிமில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 7 லட்சத்துக்கும் குறைவாகவே அதாவது 6,10,577 பேர் என்ற அளவிலேயே மக்கள் தொகை உள்ளது. மேலும், 1998 – 99 காலகட்டத்தில் 2.75 சதவீதமாக இருந்த பிறப்பு விகிதம் 2019 –20 காலகட்டத்தில் 1.1 சதவீதமாக சரிந்து உள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வு தெரிவிக்கிறது.
சிக்கிம் மாநிலத்தில் பட்டப்படிப்பு முடித்த 52 சதவீத பெண்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்வதாகவும் , பட்டப்படிப்பு படிக்காத 36 சதவீத பெண்கள் இரண்டு அல்லது 3 குழந்தைகளை பெற்றுக் கொள்வதாகவும் மற்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்து குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்த வேண்டி இருப்பதாகவும், சிக்கிம் மாநிலத்தின் கலாசாரம், மொழி ஆகியவற்றை இழக்காமல் இருக்க மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகிறது என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள் ஒரு குழந்தைக்கும் அதிகமாக பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ளார். மாநிலத்தின் மக்கள் தொகையை அதிகரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் வியப்பூட்டுகின்றன. பெண் ஊழியர் ஒருவர் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வும், 3வது குழந்தை பெற்றுக் கொண்டால் இரண்டு ஊதிய உயர்வும் அளிக்கப்படும் என இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது சிக்கிம் மாநில அரசு.
குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் ஊழியர்கள் ஒரு வருட காலம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும், புதிதாக தந்தையாகும் ஆண்களுக்கு 30 நாட்கள் விடுமுறை என்பதும் மாநில அரசின் அறிவிப்புகளில் ஒன்று. இதுமட்டுமல்லாமல், சிக்கிம் மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு சிறப்பு நிதி உதவியும், கருத்தரித்தலில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு ஐ.வி.எப். எனப்படும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்காகும் செலவில் 3 லட்சம் ரூபாய் வரை நிதி உதவியும் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது சிக்கிம் அரசு.
விரைவில் சீனாவை முந்திவிடும் நிலையில் இந்திய மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் அரசின் இந்த நடவடிக்கையை மற்ற மாநிலங்கள் வியப்புடன் பார்க்கின்றன.