உள்ளூராட்சித் தேர்தலை 6 மாதங்களுக்கு ஒத்திப்போட்டால் 1200 கோடி ரூபா மீதமாம்!
“இப்போதைய நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போடுவதே சரியான முடிவு. தேர்தலை ஆகக்குறைந்தது 6 மாதங்களுக்கு ஒத்திப்போட்டால் 1200 கோடி ரூபா மீதமாகும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாங்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தயாராகவே இருக்கின்றோம். இருந்தும், இப்போது நாடு இருக்கின்ற நிலையில் தேர்தலை ஒத்திப்போடுவதே சிறந்தது. அதில் மிஞ்சும் பணத்தை எடுத்து பொருளாதாரத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.
இந்தத் தேர்தலை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒத்திப்போடுவது நல்லம் என்பதுதான் எனது நிலைப்பாடு. ஆகக்குறைந்தது 6 மாதங்களுக்கு தேர்தலை ஒத்திப்போட்டால் ஆயிரத்து 200 கோடி ரூபா நிதி மீதமாகும். அதை வைத்து எவ்வளவோ சேவை செய்யலாம்.
மக்கள் பொதுவாக எல்லா அரசியல்வாதிகளையும் வெறுக்கிறார்கள். இப்போதைய பொருளாதார நிலையின் கீழ் மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்று சொல்ல முடியாது.
எனக்கு வாக்களித்த 70 ஆயிரம் மக்கள்கூட இப்போது என்ன முடிவெடுத்திருக்கின்றார்கள் என்று கூற இயலாது.
சம்பளப் பிரச்சினை இருக்கின்றது. எரிபொருள் பிரச்சினை இருக்கின்றது. வைத்தியசாலைகளில் பிரச்சினை இருக்கின்றது.எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குப் பணம் தேவைப்படுகின்றது.
இப்படியான ஒரு சூழ்நிலையில் தேர்தலுக்குச் செல்வது பொருத்தமானதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பதை விடவும் மக்களின் பிரச்சினைகளை எப்படித் தீர்க்கலாம் என்றே எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” – என்றார்.