கோர விபத்துக்களில் 9 பேர் பரிதாபச் சாவு!
இலங்கையின் 6 இடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 வயது மாணவி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
நீர்கொழும்பில் ஓட்டோவும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது 25 வயதுடைய ஓட்டோ சாரதியான இளைஞரும், அதில் பயணித்த நீர்கொழும்பு, வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 68, 64 வயதுகளையுடைய வயோதிபத் தம்பதியினரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி – எல்பிட்டியவில் ஹயஸ் வாகனமும் மினிபஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது ஹயஸ் வாகனத்தின் சாரதியான 42 வயதுடைய குடும்பஸ்தரும், ஹயஸ் வாகனத்தில் முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற 19 வயதுடைய இளைஞரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சாரதியும், இளைஞரும் அம்பாந்தோட்டையைச் சேர்ந்தவர்களாவர். விபத்து தொடர்பில் மினிபஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து இருந்து மாணவி ஒருவர் முன்பக்கக் கதவின் ஊடாக தவறி விழுந்துள்ளார். இதன்போது காயமடைந்த 6 வயதுடைய மாணவி அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் மோட்டார் சைக்கிளும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்திய 28 வயதுடைய இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் வான் சாரதி உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – மாளிகாவத்தையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றைச் செலுத்தி வந்த 37 வயதுடைய பம்பலப்பிட்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த 22 வயதுடைய இளைஞர் சிறுகாயங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளையில் ஓட்டோ ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது 29 வயதுடைய ஓட்டோ சாரதியான இளைஞர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் மருதானையைச் சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.