தீப்பிடித்த கப்பலில் இருந்த ஒருவரைக் காணவில்லை: எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கடும் பிரச்சினை
இலங்கையின் கிழக்கு கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்த எண்ணெய் டேங்கரில் இருந்த இருபத்தி இரண்டு மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒரு மாலுமியைக் காணவில்லை என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் இந்திக சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெரிய கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதற்கான வசதிகள் இலங்கை கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படைக்கு இல்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. எனவே, இலங்கையின் கிழக்கு கடற்கரையில் உள்ள அம்பாறையிலிருந்து தெற்கு கடற்கரையில் அம்பாந்தோட்டை வரையில் எண்ணெய் கசிவு ஏற்படின் அது கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த பெரிய கப்பல் தீப்பிடித்து அதன் எண்ணெயைக் கடலுக்குள் கசிந்தால் , பாரிய எண்ணெய் கசிவைச் சமாளிக்கும் தொழில்நுட்ப திறன் இலங்கைக்கு இருக்காது. ஆனால் அதிலிருந்து ஏற்படக்கூடிய பேரழிவுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம். உடனடியாக மேலாண்மை மையத்தில் ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ”என்று பேரிடர் மேலாண்மை மையத்தின் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
(MT New Diamond – Crude Oil Tanker)
2000 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது.
பனாமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது 333 மீட்டர் நீளம் கொண்டது.
விபத்து நடந்த நேரத்தில், கப்பல் குவைத்தின் மீனா அல் அஹ்மதி துறைமுகத்திலிருந்து இந்தியாவின் ஒடிசாவில் உள்ள பரதீப் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது.
இந்த கப்பலில் 270,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் மற்றும் 170,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலின் கச்சா எண்ணெய் மற்றும் டீசல் கசிவு ஏற்பட்டால் இலங்கையால் அப்படியான பெரிய பேரழிவை எதிர்கொள்ள முடியாது என இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவியான தர்ஷனி லஹந்தபுர கருத்து தெரிவித்தார்.
“கடலில் எண்ணை கசிவு ஏற்பட்டும் நிலையில், அது பிராந்தியத்தில் மிகப்பெரிய எண்ணெய் கசிவாக இருக்கலாம். சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்தை எங்களால் அளவிட முடியாது. அவ்வாறு செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.” என்றார் அவர்.
எண்ணெய் கசிவு கடற்கரையை அடைய சுமார் 30 மணி நேரம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், முக்கியமான சுற்றுச்சூழல் மண்டலங்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார். முடிந்தால் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துக் கொண்டு செல்லப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“கப்பலை ஆழ்கடல் வரை இழுத்துச் செல்ல ஏற்கனவே இரண்டு டக்போட்கள் அனுப்பப்பட்டுள்ளன.” என்றார்.
ஆனால் கடற்படை நிபுணர்களின் கூற்றுப்படி, இவ்வளவு பெரிய கப்பலை ஆழ்கடல் வரை இழுக்கக் கூடிய வசதிகள் இலங்கைக்கு இல்லை.
இந்த சூழ்நிலையை தீர்க்க தெற்காசிய நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் ஒருங்கிணைந்து வருகின்றன என்று கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தெரிவித்தார்.
“கச்சா எண்ணெய் கசிவைத் தடுக்க நாங்கள் ஏற்கனவே உபகரணங்கள் மற்றும் பிற வளங்களைத் தயாரித்து உடனடியாக அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு அனுப்பினோம்.” என்றார் அவர்.