இஸ்ரேலில் மதவழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி.
பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் பல ஆண்டுகளாக நீண்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது. ஆனால் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி ஒழித்துக்கட்ட இஸ்ரேல் முயற்சிக்கிறது.
இதனால் மேற்கு கரை, காசா முனை பகுதியில் இரு தரப்பும் அடிக்கடி மோதி வருகின்றன. இதனால் இரு தரப்பிலும் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. இதற்கிடையே, ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். மேற்குக் கரையின் போராளிகளின் கோட்டையான ஜெனின் அகதிகள் முகாமில் நேற்று நடத்திய சோதனையின்போது இந்த வன்முறை நிகழ்ந்ததாக கூறினர்.
இந்த மாதத்தில் மோதல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து மேற்குகரையில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசப்பட்டது. இந்த ஏவுகணைகளை இஸ்ரேலில் உள்ள ஏவுகணை தடுப்பு அமைப்பு நடு வானில் தடுத்து அழித்தது. இதனால், இஸ்ரேல், மேற்குகரை இடையே பதற்றம் அதிரித்தது. இந்நிலையில், இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
மேலும், சிலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.