தைப்பூச திருவிழா: கோவையில் இருந்து பழனிக்கு 5 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கம்.
மதுரை கோட்ட ரெயில்வே சார்பில், பழனி கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக திண்டுக்கல்-கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த முற்றிலும் பொதுப்பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில் (வ.எண்.06077) கோவையில் இருந்து இன்று (சனிக்கிழமை), 29-ந் தேதி, வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06078) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது. இந்த ரெயில்கள், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி ரோடு, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயிலில் மதுரை வர விரும்பும் பயணிகள் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.25 மணிக்கு கோவை-நாகர்கோவில் செல்லும் ரெயிலில் ஏறி மதுரை வந்தடையலாம். பழனி செல்ல விரும்பும் மதுரை பயணிகள் நாகர்கோவில்-கோவை செல்லும் ரெயிலில் மதுரையில் இருந்து 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் சென்றடையும் வசதி உள்ளது.