’13’ ஒரு சாபக்கேடு; அதை ஒழிப்பதே ஒரே வழி! – நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்கிறார் சரத் வீரசேகர.
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதே ஒரே வழியாகும் என்று ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
’13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்கவேண்டுமானால் யாராவது 22ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும்”- என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நடத்திய சர்வகட்சிக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்தக் கருத்து தொடர்பில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ‘மொட்டு’வின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது:-
“13 ஆவது திருத்தம் இலங்கையின் அரசமைப்புக்கு ஒரு சாபக்கேடான சட்டமாகும். இந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியது போல் அதை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்தால் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். ஏனெனில் சிக்கலுக்குரிய 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதே ஒரே வழியாகும்” – என்றார்.