அடித்து வட்டிப் பணம் வசூலித்த கூலிப்படை நபர்கள் 5 பேர் கைது! – கும்பலின் தலைவர் ஏற்கனவே விளக்கமறியலில்..

வட்டிக்குக் கொடுத்த பணத்தை வசூலிக்கும் கூலிப் படையினராகச் செயற்பட்ட மேலும் 5 சந்தேகநபர்களை யாழ். மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தக் கும்பலின் தலைவராகச் செயற்பட்டவரென் கூறப்படும் நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அளவெட்டியைச் சேர்ந்த 26 வயதான விதுராஜ் என்பவரே இந்தக் கும்பலின் தலைவர் என்றும், நேற்றுமுன்தினம் அவரை நீதிமன்றில் முற்படுத்திய சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது குழுவில் இயங்கியவர்களான சுன்னாகம், மின்சார நிலைய வீதியைச் சேர்ந்த சி.சிறிகாந்தா (வயது 29), அச்செழு நீர்வேலியைச் சேர்ந்த க.கருணாகரன் (வயது 36), சுன்னாகம் சூறாவத்தையைச் சேர்ந்த ரா.வசந்தராஜா (வயது 24), சுன்னாகம் மயிலங்காட்டைச் சேர்ந்தவர்களான வ.யதுர்சன் (வயது 24), செ.ரமேஸ்கரன் (வயது 54) ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். இவர்கள் தவிர மற்றொரு சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸில் சரணடைந்ததை அடுத்துக் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் அனைவர் மீதும் இருவரைக் கடத்தி தாக்கினார்கள் என்கின்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ரமேஸ்கரன் முச்சக்கரவண்டி வைத்திருக்கின்றார். அடிக்கவேண்டிய நபர்களை இவரே வீடுகளுக்குச் சென்று தனது வண்டியில் ஏற்றி வருவார். அப்படி அழைத்து வரப்படுபவர்கள் யதுர்சனுக்குச் சொந்தமான வாழைத்தோட்டத்தில் வைத்துத் தாக்கப்படுவார்கள். அதனைக் காணொளி (வீடியோ) பதிவு செய்துகொள்வார்கள். வட்டிப் பணத்தையும் முதலையும் தவணை தவறாது ஒழுங்காகக் கட்டவேண்டும் என்றும், இல்லையேல் அடிவிழும் காணொளியை சமூக ஊடகங்களில் பரப்பி விடுவோம் என்றும் மிரட்டுவார்கள். பொலிஸாரிடம் முறையிட்டால் வெட்டுவோம் என்றும் மிரட்டுவார்கள். இதற்குப் பயந்துகொண்டு பாதிக்கப்பட்ட யாருமே இதுவரையில் பொலிஸில் முறைப்பாடு செய்ததில்லை.

இப்படி இந்தக் குற்றச் செயலின் பின்னணியை விளக்கினார்கள் யாழ். விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார்.

யாழ். பிராந்திய குற்றப் பொலிஸ் மூத்த அத்தியட்சகர் கீழ் வழிகாட்டலில் யாழ். மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் மேற்பார்வையில் மாவட்ட குற்றத் உப பொலிஸ் பிரதீப் தலைமையிலான குழுவினர் இந்த குற்றக் கும்பல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இவ்வாறு இருவரை வாழைத் தோட்டத்தில் வைத்துத் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து அதன் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரிடமிருந்து பொலிஸாரால் முறைப்பாடு பெறப்பட்டுள்ளது.

காணொளியில் பதியப்பட்டுள்ள சம்பவம் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்றது என்று பொலிஸார் கூறுகின்றனர். எனினும், இந்த ஒருங்கிணைக்கப்பட்ட குற்றத்தைச் செய்து வந்த கும்பலுக்குள் ஏற்பட்ட பிளவை அடுத்தே தற்போது அந்தக் காணொளிகள் வெளிவந்துள்ளன என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுன்னாகத்தில் டாட்டா கனரக பிக்கப்பால் சுசுக்கி வெகனார் காரை மோதித் தள்ளி அதிலிருந்தவர்களை வாள்களால் வெட்டினார்கள் என்கின்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மருதனார் மட்டம் சந்தை வியாபாரியான ஜெகன் என்பவர் தலைமையில் முன்னர் இந்தக் குழுவினர் செயற்பட்டு வந்துள்ளனர். பின்னர் அந்தக் குழு பிளவுண்ட நிலையில் இரண்டு மூன்று குழுக்களாச் செயற்பட்டு வந்துள்ளனர்.

சுன்னாகம் வாகன மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு தரப்பை மறு தரப்பு பொலிஸாரிடம் மாட்டி விடும் வகையிலேயே இந்தக் காணொளிகள் பொது வெளிக்கு வந்துள்ளன என்று விசாரணையில் தெரியவந்திருக்கின்றது.

மாதாந்த வட்டி 10 சதவீதத்துக்கும் அதிகமாக ஒரு இலட்சம் ரூபா வரையான பணத்தை வட்டிக்குக் கொடுத்துவிட்டு, அதனை வாரா வாரம் வசூலிப்பது இந்தக் கும்பலின் குற்றத் தொழிலாக இருந்து வந்துள்ளது. வாராந்தத் தவணையைக் கட்டத் தவறுபவர்களை இவ்வாறு தனி இடத்துக்கு அழைத்துத் தாக்கி அதனைக் காணொளி எடுத்து அவர்களை மிரட்டுவதுடன், தம்மிடம் கடன் பெறும் ஏனையவர்களுக்கும் அதனைக் காட்டி எச்சரிக்கை செய்து வந்திருக்கின்றனர் என்கின்றனர் இவர்கள்.

இருப்பினும் இப்போது நபர்களைக் கடத்தித் தாக்கியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேய இவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் மேற்கொண்ட சட்டவிரோத நிதிக் கையாளுகைகள் குறித்து விசாரணையோ சட்ட நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.