50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தி.மு.க. தலைவர்கள் வியூகம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறங்கியுள்ளார். அவருக்கு எதிராக அ.தி.மு.க. போட்டியிடுகிறது. ஆனால் அந்த கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் களத்தில் சாதகமாகவே அமைந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கும் முன்னே தி.மு.க. தனது பிரச்சாரத்தை தொடங்கியது.
அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு வீடு வீடாகச் சென்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்கள். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு இந்த பிரச்சாரம் வேகமெடுத்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பதில் தி.மு.க. தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
சென்னையில் இருந்து சென்றுள்ள தி.மு.க. முன்னணி தலைவர்கள் மற்றும் ஈரோடு மாவட்ட தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் என அனைவருமே வாக்காளர்களை கவரும் விதத்தில் தி.மு.க. அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படி வாக்காளர்களை சுற்றி சுற்றி வரும் தி.மு.க. தலைவர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அ.தி.மு.க. 2 அணிகளாக களத்தில் உள்ள நிலையிலும் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் கணக்கு போடவில்லை.
இதையே சாதகமாக பயன்படுத்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அ.தி.மு.க. சார்பில் பல்வேறு குழப்பங்கள் காரணமாக இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதையும் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தி.மு.க.வுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டு இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் அனைத்து கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் வாக்குகள் சிதறும் நிலை உள்ளது. இதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றி விகிதத்தை அதிகரிக்க தி.மு.க. கூட்டணி கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதற்காக தி.மு.க. தலைவர்கள் அதிரடி வியூகம் வகுத்து செயலாற்றி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் களமிறங்கியுள்ளன.
இதில் டி.டி.வி.தினகரன் பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு செல்ல வேண்டிய வாக்குகளாகும். இதுவும், கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதும் இளங்கோவனுக்கு சாதகமாக அமைந்துள்ளன. இப்படி தேர்தல் களத்தில் இளங்கோவன் வெற்றி பெறுவதற்கே சாதகமான அம்சங்கள் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இளங்கோவன் நிச்சயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை போட்டியிட்ட இளங்கோவனின் மகன் திருமகன் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். இந்த முறை அது போன்று நடக்க வாய்ப்பில்லை எனவும் வாக்கு வித்தியாசம் அதிகமாகவே இருக்கும் என்றும் தி.மு.க.வினர் கூறுகிறார்கள். இளங்கோவனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெற வைக்க முடியும் என்கிற எண்ணத்தில் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியினரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.