பழனிசாமி முறையீடு – தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வசதியாக, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிபதிகளிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் இன்று இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்டினால்தான் இடைத் தேர்தலில் பி பார்மில் கையெழுத்திட முடியும். அப்போதுதான் இரட்டை இலை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர். வழக்கை பிப்ரவரி 3ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தனர்.