370 கிலோ காரை அசாதாரணமாக தூக்கிச் சென்ற இரும்பு இளைஞர்…!
குமரி மாவட்டம் தாமரைக்குட்டிவிளத்தைச் சேர்ந்தவர் கண்ணன். 39 வயதான தமிழ்நாட்டின் இரும்பு இளைஞராக அறியப்படும் இவர் உடல்வலு பயிற்சியாளராக இருந்து வருகிறார். பஞ்சாப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாவது இடம்பிடித்தார். இவர் ஏற்கனவே 13. 5 டன் எடை கொண்ட லாரியை 111 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று தேசிய அளவில் சாதனை படைத்து உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கிச் செல்லும் நிகழ்ச்சி நாகர்கோயில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார். 370 கிலோ எடை கொண்ட காரை 25 மீட்டர் தூக்கி நடந்து புதிய சாதனையை படைத்தார் கண்ணன். இதனை வியந்து பார்த்த அமைச்சர் உள்ளிட்ட பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
இதனை நேரில் பார்வையிட்ட சோழன் புக் ஆப் ரெக்கார்டு நிறுவன நிர்வாகிகள், அவருக்கு இந்த உலக சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கினார்கள். ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த 155 கிலோ கொண்ட நபர் ஒருவர் 435 கிலோ காரை 25 மீட்டர் தூக்கி நடந்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் 90 கிலோ எடை கொண்ட கண்ணன், தனது எடையை விட 4 மடங்கு அதிக எடை கொண்ட காரை Yolk walk முறைப்படி தூக்கிக்கொண்டு நடந்து சாதனை படைத்துள்ளார்.