“தமிழர் தேசமே எழுந்துவா” – கரிநாள் பேரணி பெப்ரவரி 4 இல் ஆரம்பம்
‘வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா’ என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாள் பேரணி இடம்பெறவுள்ளது. வடக்கு – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகும் இந்தப் பேரணி மட்டக்களப்பில் 7ஆம் திகதி நிறைவுறும்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக்காக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி ஒழுங்கமைக்கப்படவுள்ளது.
பேரணிக்கான ஆதரவு கோரி சிவில் சமூகத்தினர், மாணவர்கள், மதத் தலைவர்கள், பல தரப்பட்டவர்களையும் மாணவர் ஒன்றியத்தினர் மாவட்டம் தோறும் சந்தித்து வருகின்றனர். பேரணிக்கான ஆதரவை பல தரப்பினரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பெரும் எடுப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலிலிருந்து பேரணி – இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4ஆம் திகதி – கரிநாள் அன்று ஆரம்பமாகவுள்ளது.
கிளிநொச்சி வரையில் முதல் நாள் பேரணி நடைபெறும். மறுநாள் 5 ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து பேரணி ஆரம்பமாகி மாங்குளம் சந்தியைச் சென்றடையும். அதே நேரம் மன்னார் மற்றும் வவுனியாவிலிருந்து புறப்படும் பேரணிகளும் மாங்குளம் சந்தியை வந்தடையவுள்ளன. சகல பேரணிகளும் ஒன்றிணைந்து அங்கிருந்து புறப்பட்டு முல்லைத்தீவில் இரண்டாம் நாளை நிறைவு செய்யும்.
மூன்றாம் நாள் – பெப்ரவரி 6 ஆம் திகதி – முல்லைத்தீவிலிருந்து புறப்படும் பேரணி, தமிழர் தாயகத்தின் சிங்கள ஆக்கிரமிப்பு பிரதேசமான தென்னமரமாவடி ஊடாகச் சென்று திருகோணமலையைச் சென்றடையும்.
நான்காவது இறுதி நாளுமான பெப்ரவரி 7ஆம் திகதி திருகோணமலையிலிருந்து புறப்படும் பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்காவைச் சென்றடைந்து அங்கு நிறைவடையும். இதன்போது அம்பாறை மாவட்டத்திலிருந்து புறப்படும் பேரணியும் அங்கு வந்தடையும்.
தேசிய சுதந்திர தினத்தை புறக்கணிக்குமாறு யாழ் மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஊழலை ஒழிக்கும் வரை எந்த தேசமும் சுதந்திரம் அடையாது என்றும், அன்றைய தினம் சுதந்திர தினத்தை புறக்கணித்து கறுப்புக்கொடி ஏற்றுவோம் என்றும் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடத்தப்படும் போராட்டங்களில் மக்கள் கலந்துகொள்ள வேண்டுமெனவும், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்தப் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.