நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கக்கூடியவர் ரணிலே! – நாமல் பாராட்டு.
“ரணில் விக்கிரமசிங்க ஒரு திறமைசாலி; அனுபவசாலி. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்கக்கூடியவரும் அவரே. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்கினோம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
உரிய திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால் அதிக சபைகளைக் கைப்பற்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும் வெற்றியடையும் என்றும் அவர் அடித்துக் கூறினார்.
தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ரணில் விக்கிரமசிங்கவை நாம் ஏன் ஜனாதிபதியாக நியமித்தோம் என்று பலரும் கேள்விகளை எழுப்புகின்றார்கள். மக்கள் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள பிரதமரை வேண்டாம் என்றார்கள். அதனால் பிரதமர் பதவிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகினார். 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியை வேண்டாம் என்று மக்கள் வலியுறுத்தினார்கள். நாடாளுமன்ற உறுப்பினரக்ளின் வீடுகளையும் அவர்கள் எரித்தார்கள்.
மொட்டுக் கட்சியில் இருந்து ஜனாதிபதி வேண்டாம் என்பதுதானே இதன் அர்த்தம். ஆகையால் மொட்டில் இருந்து ஒருவரை நியமிக்கும் உரிமை எங்களுக்கு இல்லை.
அதனால்தான் நாம் ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்தோம். எங்களுக்கு அப்போது இருந்த மாற்று வழி அது ஒன்றுதான்.
மேலும், அவர் ஒரு திறமைசாலி; அனுபவசாலி. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்கக்கூடியவரும் அவரே. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்கினோம்” – என்றார்.