புதின் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்: போரிஸ் ஜான்சன் குற்றச்சாட்டு.
உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக வலுவாக குரல் கொடுத்து வரும் உலக தலைவர்களில் ஒருவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
இவர் பிரதமராக இருந்தபோது போருக்கு மத்தியில் 3 முறை உக்ரைனுக்கு பயணம் செய்து அந்த நாட்டுக்கு இங்கிலாந்தின் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினார். பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.
இந்த நிலையில் போர் தொடங்குவதற்கு முன், அதை தடுக்க ரஷிய அதிபர் புதினிடம் மேற்கத்திய நாடுகள் எவ்வாறு போராடியது என்பதை காட்டும் ஆவணப்படத்தை பிபிசி செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதில் பேசியுள்ள போரிஸ் ஜான்சன், புதின் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
போருக்கு முன்னர் என்னிடம் தொலைபேசியில் உரையாடிய புதின், என்னை மிரட்டும் தொனியில் பேசினார். ஒரு கட்டத்தில் “போரிஸ், நான் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் ஏவுகணை மூலம், அது ஒரு நிமிடத்தில் நடக்கும் அல்லது அதுபோல வேறு ஏதும் நடக்கும்” என மிரட்டினார். இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறினார்.