மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க கடைசி நாள் இன்று.. அவகாசம் நீட்டிக்கப்படுமா?
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, மின் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் முடியும் என அரசின் தரப்பில் கூறப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை வரை வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி , விவசாய இணைப்பு என 2 கோடியே 34 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் உடன் இணைக்கப்பட்டதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது. இது மொத்தம் உள்ள 2 கோடியே 67 லட்சம் இணைப்புகளில் 87.44 சதவீதம் ஆகும்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முதலில் கடந்த மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர், கூடுதலாக ஒரு மாதம் வழங்கப்பட்ட நிலையில், அந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இன்னும் 33 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, ஆதாருடன் மின் இணைப்பை சேர்ப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.