கர்நாடக மாநிலத்தில் அரிய வகை பறக்கும் பாம்பு…சந்தையில் சிதறி ஓடிய கூட்டம்..!
பறக்கும் பாம்பு என்பதை நம்மில் ஒரு சிலரே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதனை நேரில் பார்த்திருக்க மாட்டோம். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அரிய வகை பறக்கும் பாம்பு சந்தையில் தென்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே பர்காலா சந்தை உள்ளது. அங்கு பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அங்கு வந்த பறக்கும் பாம்பு ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்திற்கு அருகே அமைந்துள்ள சலவை நிலையத்திற்கு எதிரே மரத்தில் இருந்த அந்த பாம்பானது தரையில் விழுந்தது.
சுமார் இரண்டரை அடி நீளமுள்ள அந்த பாம்பின் உடலில் வெள்ளை மற்றும் கறுப்பு நிற கோடுகளும் சிவப்பு நிறத்திலான புள்ளிகளும் இருந்தன. அது நஞ்சுள்ள பாம்பு என அருகில் இருந்தவர்கள் அச்சம் கொள்ள ஆரம்பித்தனர். ஆனாலும் இந்த வகை பாம்புகள் நச்சுத் தன்மை அற்றவை என பாம்பு வல்லுநர் குருராஜ் சனில் தெரிவித்தார்.
10 முதல் 15 அடி உயரம் வரை ஏறும் திறன் கொண்ட இந்த பறக்கும் பாம்புகள், அங்கிருந்து தரையில் குதிக்கும். இந்த பாம்புகள் சிறப்பாக மரம் ஏறக்கூடியவை. மலைப் பகுதிகளில்தான் அதிகமாக காணப்படும். கடலோர பகுதிகளில் அரிதினும் அரிதாகவே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.