மாகாண சபை முறைமையை ஜே.வி.பி. இனி எதிர்க்காது! – அதன் தலைவர் தெரிவிப்பு.
மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பு தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது நாட்டில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அக்காலக்கட்டத்தில் சிங்கள அரசியல்வாதிகளுக்கும், தமிழ்த் தலைமைகளுக்கும் இடையில் பேச்சு நடந்து இணக்கமான சூழலில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை மாற்றமடைந்து விட்டது.
தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே மாகாண சபை முறைமை உள்ளது. ஆகவே, மாகாண சபை முறைமையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதை எதிர்க்கப் போவதில்லை” – என்றார்.