மொட்டு கட்சிக்குள் சரத் வீரசேகரவிற்கு பலத்த எதிர்ப்பு
மாகாண சபைகள் செலவை தரும் பயனற்ற ஒன்று என சித்தரித்து அதனை இல்லாது செய்ய முற்படும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களின் ஒன்றியம் கண்டனத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
மாகாண சபைத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சனா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் காஞ்சனா ஜெயரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண சபைகளை ஒழிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர கூறியமைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிக்கை அவரது தனிப்பட்ட அறிக்கையாகும். அரசாங்கத்தின் கொள்கை அல்ல. அந்தவகையில் அமைச்சர் சரத் வீரசேகர அறிக்கை குறித்து எங்களது அதிருப்தியை வெளிப்படுத்த ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஏராளமான முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் சரத் வீரசேகர உள்ளிட்ட சிலர் அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சிகளை முன்னெடுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சரத் வீரசேகர மாகாண சபைக்கு எதிராக விட்டுக் கொண்டிருந்த போது அரசு அவருக்கு மாகாணசபைக்கான இராஜாங்க அமைச்சர் பதவியை வழங்கியது தனது வினை என சரத் வீரசேகர நொந்து பேசியது குறிப்பிடத்தக்கது.