மார்ச் 9 இல் தேர்தல் நிச்சயம்! ஜனாதிபதி ரணில் தன்னிடம் உறுதியளித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நிச்சயம் நடத்தப்படும் என்று தன்னிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர், வந்த கையுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்த பின்னர், தமிழ் – முஸ்லிம் மக்களின் அரசியல் தலைவர்களை ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பிலுள்ள நட்சத்திரக் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி., புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போதே உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நிச்சயம் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் உறுதியளித்தார் என்று அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட், தமிழ் – முஸ்லிம் மக்களின் அரசியல் தலைவர்களிடம் குறிப்பிட்டார்.
இந்தத் தகவலை சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.
காணிப் பிரச்சினை, அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளருடன் கலந்துரையாடினோம் என்றும் சுமந்திரன் எம்.பி. மேலும் கூறினார்.